Monday, 14 June 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 9

அத்தியாயம் – 9 

(தமிழ் குடிமகனும், பாண்டிச்சேரி குடிமகனும்)

தன் எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த பா.ரா.வை பன்னாடை (அட….நம்ம ஊரு வசை பாசை) என்று சூனியன் வசைபாடுவதில் அத்தியாயம் ஆரம்பமாகிறது. பா.ரா.வின் திட்டம் இதுவாகத் தான் இருக்கும் என அறுதியிடும் சூனியன் அவரை தங்கள் குல எதிரியாகப் பார்ப்பதோடு. கோரக்கர் என்று அவரை அடையாளப்படுத்துகிறான்.

கோவிந்தசாமிக்கு உதவுவதில் இருந்து சூனியன் பின்வாங்க மாட்டான் என்றே தோன்றுகிறது. சாகரிகா மீதும் அவனுக்கு நல்ல அபிப்ராயமே இருக்கிறது. ஏன் கோவிந்தசாமியை வெறுத்து ஒதுக்குகிறாள்? என்பதை அறிவதற்காக வெண்பலகையில் அவளின் கடந்தகால பதிவுகளை வாசித்துப் பார்க்கும் போது கோவிந்தசாமி குறித்து அவள் எழுதியிருக்கும் ஒரு பதிவு தான் இந்த அத்தியாயத்தின் சுவராசியம். கோவிந்தசாமி மூட மாங்கா மடையன் என்பதற்கான சாட்சிகளுள் ஒன்றாக இந்த சுவராசியத்தை சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சங்கேதக் குறியீடுகள் எல்லாம் வைத்து சரக்கடித்தால் அவன் என்ன தான் செய்வான்?

தான் யோக்கியவான் என்பதை உறுதி செய்யும் பிறப்பின் மூல வித்தைத் தேடி கோவிந்தசாமி பாண்டிச்சேரி போகிறான்.  சாகரிகா அவனிடம் அங்கிருந்து வரும் போது க்ரைப் வாட்டர் வாங்கி வரச் சொல்கிறாள். க்ரைப் வாட்டர் குழந்தைக்குத் தானே வேண்டும். இந்தக் குமரிக்கு எதுக்கு? என இந்த பயபுள்ள யோசிக்கவில்லை. ஆசை மனைவியின் சொல் மதியை மழுங்கடித்து விட்டது போலும்! க்ரைப் வாட்டர்க்காக அவன் செய்த ஏற்பாட்டோடு அத்தியாயம் நிறைவடைகிறது.

தலைப்பை பார்த்ததும் அத்தியாயமும் அதனையொட்டியே இருக்குமென நினைத்தேன். ஆனால், உள்ளே செல்ல, செல்ல நேரடியாகவே தமிழ்குடிமகனையும் அவர் மூலம் திராவிட அரசியலையும் கொண்டு வரும் பா.ரா. சாகரிகாவுக்கு நெருக்கம் தருபவனாக விஷால் என்ற கலைஞனையும்,, கோரக்கரின் பக்தனாக தன்னையும் இந்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

பிற்பாடு இதே தகவலை பா.ரா. திரித்து சொல்லக்கூடும் என சூனியன் சூசகமாய் சொல்லியிருப்பதால் தேசிய - திராவிட அரசியல், கோரக்கர் -  சூனியன் மோதல், ஆண்கள் -  சாகரிகாவின் விளையாட்டு, கோவிந்தசாமி - அவன் நிழல் என இனி வரும் அத்தியாயங்களில் சுவராசியங்களுக்கு பஞ்சமிருக்காது என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment