தன்னம்பிக்கை நூல்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, ஜெயித்தவர்களின் வரலாறுகளைத் தொகுத்து நம்பிக்கை தரும் நூல்கள். மற்றொரு வகை, ஜெயித்தவர்கள் நேரடியாகத் தாங்கள் சாதித்த விதத்தை அனுபவங்களோடு பகிர்ந்து அதன் மூலம் நம்பிக்கை அளிக்கும் நூல்கள். இதில் இந்நூல் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால் நிறுவனங்களின் அதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன்.
வியாபாரத்தில் ஜெயிப்பதற்கான தனிப்பட்ட குணாதிசயங்களை நிறைய கதைகள், வெற்றியாளர்களின் வாழ்வியல், தன் தொழில் முறை அனுபவங்களோடு கலந்து கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வியாபாரம் தொடங்குபவர்களுக்கும், அதில் இருப்பவர்களுக்கும் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வியலுக்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது.
தான் நுழைந்த துறையில் உச்சத்தைத் தொட்டு நம் கண்முன்னே வளர்ந்து நிற்கும் ஒரு நிறுவனம் தரும் நம்பிக்கை எத்தனை புத்தகங்கள் வழி எங்கோ இருக்கும் நிறுவனக் கதைகளின் வழி கிடைத்து விடப் போவதில்லை. எனவே இந்நூலை வாசிக்கும் போது ஒரு வெற்றியாளரோடு அமர்ந்து பேசுவது போன்ற உணர்வே மேலிடுகிறது. ஆர்.ஜி. சந்திரமோகன் அவர்கள் இந்நூலின் அடிநாதமாய் காட்டி இருக்கும் விசயங்களைத் தொகுத்து வைத்துக் கொண்டாலே அதுவே பெரிய உந்து சக்தியை நமக்கு அளிக்கும்.
கடன்களைக் கையாள்வதில் நாம் செய்யும் தவறுகள், தன்னம்பிக்கையை அகங்காரமாக மாற்றிக் கொள்ளுதல், வாய்ப்புகளைக் கண்டறிய தவறுதல், தப்பான விமர்சனங்களுக்குள் சிக்குதல், இக்கட்டான நேரத்தில் உற்சாகமிழத்தல், சோம்பலில் தூய்த்திருத்தல், செயல் திட்டமில்லாது இயங்குதல், பிரச்சனைகளைக் கண்டு பின்வாங்குதல், தொலைநோக்கு பார்வையற்று செயல்படுதல் போன்ற வெற்றியை பின்னுக்கு இழுக்கும் விசயங்களின் கண்ணிகளை உடைத்து எப்படி முன்னேறலாம்? என்பதைச் சொல்லி நகரும் இந்நூல் நம்பிக்கை நல்கும் உந்து சக்தி!
சுருக்கமாக எனினும் அருமையான நூல் அறிமுகம்.வாழ்த்துகள்..
ReplyDelete