Wednesday, 16 June 2021

இதயத்தை திருடுகிறாய் – கலக்கல் காக்டெய்ல்

ஜி.ஆர். சுரேந்தர்நாத் எழுதி சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக வந்திருக்கும் சிறுகதைத் தொகுதி “இதயத்தை திருடுகிறாய்”. கவிதைகளுக்கு நிகராக காதலை அதன் மனம் மாறா வகையில் கதைகளிலும் சொல்ல முடியும் என்பதற்கு இத்தொகுப்பு நல்ல உதாரணம். இப்படியான கதை சொல்லலில் ஒரு வசதி இருக்கிறது. காதலின் நுண் வெளிப்பாடுகளை அழகுணர்ச்சியோடு சொல்ல முடிந்தால் போதும். கதைகளுக்கே உரிய தொன்மையான மரபுகளுக்குள் சிக்காமல் அந்தப் படைப்பு தப்பி விடும். இத்தொகுப்பின் கதைகளில் பல அப்படி தப்பித்து நம் இதயம் தழுவக் கூடியவைகள்! 12 கதைகள் இருக்கின்றன. காதல், எதார்த்தம், சமூகம் சார்ந்து பேசக்கூடியவைகள் என்ற மூன்று பிரிவுகளுக்குள் மொத்த தொகுப்பையும் அடக்கி விட முடியும்.

காதலைக் கடந்து வராதவர்கள் இருக்கவே முடியாது. அப்படி எவரும் வந்திருந்தால் அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது. அதனால் தான் காதல் பற்றி எழுதப்படும் கவிதைகளையும், கதைகளையும் வாசித்து முடிக்கையில் அவைகள் இரண்டு உதடுகளுக்கிடையே ஒட்டிக் கொள்ளும் கடைசி சொட்டுத் தேநீர் போல நமக்கு ஒரு உவப்பைத் தருபவைகளாக இருக்கின்றன. காதலை விடவும் அதை எழுதிப் பார்ப்பவர்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

காதலித்தவனை கைபிடித்தே தீருவேன் என மகள் அடம் பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் காதலனைச் சந்தித்து தன் மகளைக் காதலிக்காமல் விட்டுவிடும்படி அவளின் அப்பா கேட்கிறார். அவர் கேட்டுக் கொண்ட விதத்தையும், அதன் தொடர்ச்சியாக அவருக்கு நிகழ்ந்தவைகளையும் கண்ட காதலர்கள் தங்கள் காதலைத் துறந்தார்களா? அல்லது காதலுக்கு மகுடம் சூட்டினார்களா? என்பதை சொல்லும் கதை “முதல் முத்தம்”.

புதிதாக வேலைக்குச் சேரும் ஸாரா என்ற பெண்னை அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் நவீன் காதலிக்க விரும்புகிறான். அவளை கவர்வதற்காக அவளுக்கு விருப்பமான பாடலை அதிகம் மெனக்கெட்டு பாட கற்றுக் கொள்கிறான். ஆனால், இவன் காதலைச் சொல்ல தீர்மானித்திருந்த நாளில் அவள் தனக்கான திருமண அழைப்பிதழோடு வந்து நிற்கிறாள். இருவர் மனதிலும் பொங்கி எழும் உணர்வுகளின் வெளிப்பாடு “என் இனிய பொன் நிலாவே” கதை.

குடும்ப கடன் சுமையால் குடும்பத்தோடு,  அவன் வாங்கிக் கொடுத்த காதல் பரிசை அணிந்த படி காதலியும் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் நினைவுகளில் இருந்து மீள முடியாத காதலன் அவளுக்குப் பிடித்த ஒற்றை பாடல் வரியை துணைக்கு வைத்துக் கொண்டு  வாழ்கிறான். “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” என்ற அந்த ஒற்றைவரி பாடலோடு நினைவுகளாய் கதை நகர்கிறது.

மேற்கொன்ன மூன்று கதைகளும் காதல் தோல்வி பற்றி பேசுகிறது. ”இதயத்தை திருடுகிறாய்” என்ற கதை வெற்றி பெற்ற காதலோடு வருகிறது. மகன் திருமணத்தால் தன் உயிருக்கு ஆபத்து வரும் ஜோசியக்காரன் சொல்லி விடுகிறான். ஜோசியக்காரன் கூறிய படி மகன் விசயத்தில் சில நிகழ்வுகள் நடக்கிறது. எங்கே அது காதலில் கொண்டு போய் மகனை நிறுத்தி விடுமோ என பயப்படும் தந்தை அதைத் தடுக்க சில அபத்த காரியங்களைச் செய்கிறார். மகனோ காதலில் மூழ்கித் திளைக்கிறான். ஒரு நாள் காதலியிடம் தன் தந்தையின் பயம் பற்றி அவன் கூற அவள் என்ன முடிவெடுத்தாள்? யார் நினைத்தது நடந்தது? என்பது தான் மீதிக் கதை.  

”விண்ணைத் தாண்டி வருவாயா” திரைப்படத்தின் அசல் குறிப்போடு கதை நகர்கிறது. கதையின் பெரும்பகுதியை திரைப்படக்கதையே நகர்த்தி விடுகிறது. அதன் பிறகே சொல்ல வந்த கதை தொடங்குகிறது. திரைப்படத்தில் காதலோடு மட்டும் பிரிந்து விடும் காதலர்கள் இந்தக் கதையில் திருமணம் வரை சென்று திரைக்கதையின் முடிவை தங்கள் வாழ்வில் மாற்றியமைக்கிறார்கள். அதன் பின் என்ன ஆனது? அந்த முடிவு தீர்க்கமானதாக அவர்கள் வாழ்வில் தொடர்ந்ததா? என்பதை காலம் தீர்மானிக்கிறது. திரைப்படம் என்பது மாயை என்பதை உணர்கிறார்கள். உண்மை காலம் கடந்து தானே தன் தோலுரிக்கும்!

ஐந்து கதைகளிலும் வரும் காதலர்கள் தங்களின் தோல்விக்காக அழுது புரளவிலை. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. எவர் மீதும் வன்மம் கொள்ளவில்லை. அவ்வாறே, வெற்றிக்காக குதுகளிக்கவும் இல்லை. மாறாக, தங்கள் கதையை, காதல் வீழ்ந்த துயரைச் சொல்லி வாசிக்கும் நம் இதயங்களைத் திருடிக் கொள்கிறார்கள். கதைகளின் பல இடங்களில் பாசிலும், மணிரத்தினமும் ப்ரேம்களில் வந்து போகிறார்கள்.

எதார்த்தக் கதைகளைப் பொருத்தவரை நம் அன்றாட தவறுகளில் இருந்தும், நிகழ்வுகளின் சாயலில் இருந்தும் கதைக்கான கருவை எடுத்திருக்கிறார்.  அதனாலயே அக்கதைகள் அனைத்தும் நமக்கு நெருக்கமானவைகளாக, இணக்கமானவைகளாக இருக்கின்றன. 

மனைவிக்கும் செல்லம், தன்னோடு வேலை செய்யும் செல்லத்துரைக்கும் செல்லம் என ஒரே பெயரில் அலைபேசி எண்ணை சேமித்து வைத்திருக்கும் மனோஜ் நண்பனுக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியை மனைவிக்கு அனுப்பி விடுகிறான். குறுஞ்செய்தியில் வந்த தகவலை தவறாக புரிந்து கொண்டதால் அவன் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை ”ஒரு செல்லக்கதை” நகைச்சுவையாகவும், இரசணையோடும் சொல்கிறது.

கலவரங்களோடு படுகைகளுக்கு வரும் பிள்ளையாரை எப்பொழுதுமே கவாலர்கள் தான் கரைத்தொழிக்கின்றனர் என்ற சமீபத்திய வரலாற்றை  காவிரிக்கரையையும், சதுர்த்தி நடத்தும் இரு குழுக்களையும் மையப்படுத்தி “a விநாயகமூர்த்தி by” கதை பேசுகிறது.

கல்லூரி வார்டன், உடன் படிக்கும் பெண் ஆகிய இருவராலும் ஏற்படும் மனச்சிக்கலால் விடுமுறைக்கு ஊருக்குப் போன பிறகு கல்லூரிக்கே வரக்கூடாது என முடிவெடுக்கிறாள். வீட்டிற்கு வந்த பின்னோ சுழற்றியடிக்கும் வறுமையில் மொத்த குடும்பமும் தன் கடைசி மானத்தை இழந்து தவிக்கிறது. கல்லூரிக்கு போவதா? வீட்டிலேயே இருப்பதா? என்ற இரு கேள்விகளுக்குள் சிக்கும் “பொன்னி” எடுக்கும் முடிவு கதையையும் முடித்து வைக்கிறது.

கணவன் கோபத்தில் அடித்து விடுவதால் அவனை விட்டு விலகி தாய் வீட்டிற்குச் செல்ல அவன் மனைவி முடிவு செய்கிறாள். தங்கையை அழைத்து ஆலோசனை கேட்கிறாள். இதற்கெல்லாம் காரணமான தன் நாத்தனாரை திட்டி தீர்க்கிறாள். எல்லாம் செய்தவள் கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றிக் கொள்கின்றாள். திருமணத்திற்கு முன் ஒரு பெண் பேசும் வீர தீர பராக்கிராமங்கள் திருமணத்திற்கு பின் சமரசமாகிவிடும் என்ற எதார்த்தத்தைச் சொல்ல அவளின் அப்பா, அம்மாவில் இருந்தே அடிவாங்கும் படலத்தை ”பெண்2014” கதை ஆரம்பித்து வைக்கிறது. 2014 ல் இருந்த பெண்களின் மனநிலை 2021 லும் கூட மாறவில்லை.

இந்த நான்கு கதைகளும் நாம் எப்போதோ, எங்கோ அறிந்தவை அல்லது கேட்டவைகள் என்பதால் மேலோட்டமான வாசிப்பிலேயே கதைகளைக் கடந்து விட முடிகிறது.

சமூகம் சார்ந்த கதைகளாக வருபவைகளும் தீவிரமான விசயங்களால் அதன் மையத்தைக் கொண்டிருக்கவில்லை.  எனினும், ஒரு அகன்ற கேக் மீது எழுதப்பட்டிருக்கும் பெயர் தனித்துத் தெரிவதைப் போல ஆசிரியர் தன் சொல்லாடல் மூலம் நிகழ்வுகளைத் தனித்துக் காட்டி விடுகிறார்.

வேலையில்லாமல் இருக்கும் இளைஞன் தாலுகா அலுவலகம் முன் மனுக்கள் அடித்துத் தரும் கம்ப்யூட்டர் கடையை திறக்கிறான். இதனால் அந்த அலுவலக மரநிழலில் அமர்ந்து கையால் எழுதித் தருபவர்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி பாதிக்கிறது? என்பதை  “பிழை திருத்தம்” கதை வாசிக்கத் தருகிறது. இன்னும் எளிமையாகச் சொன்னால் கார்ப்பரேட் முதலாளிகளால் சிறு வியாபாரிகள் நலிந்து வீழ்ந்ததை எளிய வடிவில் சொல்லும் கதை எனலாம்.

தன் கண் முன்னால் ரவுடிகளால் தூக்கிச் செல்லப்படும் பெண் அபயக்குரல் எழுப்புகிறாள். அதைக் கேட்டும், பார்த்தும் காணாததைப் போல கடந்து சென்றவன் தன் குற்ற உணர்வு நீங்க ஒரு முடிவு எடுக்கிறான். அந்த முடிவை அந்தப் பெண் ஏற்றாளா? மறுத்தாளா? என்பதை “ஆண்” கதை பேசுகிறது.

”கதையில் நிகழும் ஒரு சிறு திருப்பம் வாசகனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி இன்னொரு திறப்பை நிகழ்த்தும் போது அந்தப் படைப்பை வாசகன் இன்னும் ஈரமாக்கிக் கொள்கிறான்” என்பதை “வெல்ல வேட்டை” கதை நிகழ்த்திக் காட்டுகிறது. கதையின் முதல் சில பக்கங்கள் நம்மையும் பால்யத்திற்கு அழைத்துச் செல்கின்றன. வெல்லத்தின் மீது ஆவல் கொள்ளும் இரு சிறுவர்களும் அதை சாராய ஊறலில் இருந்து சேகரித்து வந்து ருசிக்கும் காட்சியில் நம் வாயிலும், கையிலும் வெல்லத்தின் சுவையும், வாசனையும் வந்து விடுகிறது. கதையின் முடிவு ஊறல் வியாபாரியை திடுக்கிட வைத்ததைப் போல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.

“அறிந்த விசயம்; அறியாத கோணம்” என்ற பொதுவான அடிநாதத்தைக் கொண்டிருக்கும் வெகுஜனவார இதழ்களில் வந்த கதைகள் என்பதோடு, துருத்தலற்ற வாசித்தலையும் தருவது தொகுப்பின் பலம்.  நவீன பாணி கதை சொல்லல் ஏதுமில்லாது நேரடியாகச் சொல்லும் முறையில் அமைந்திருக்கும் கதைகளாக இருப்பதால் இரசணை மட்டுமே கடைசிப் பக்கம் வரை வாசிப்பை நீட்டித்துச் செல்ல வைக்கிறது. தீவிர மறு வாசிப்புக் கோரலை இப்படியான நீட்டிப்பு தொடர்ந்து செய்ய வைக்காது என்பது இத்தொகுப்பிற்கும் பொருந்தும்.

மாடத்து முற்றத்தில் சாரலாய் மழை இறங்கும்  காலை பொழுதில் ஆவி பறக்க ஒரு கோப்பை தேநீர் அருந்தும்  மனநிலையிலோ அல்லது மன அழுத்தமோ, வருத்தமோ மேலெழுந்து நிற்கும் போதோ அல்லது கடவுள் சிலரை காதலர்களோடு வாழ்வதற்காக படைக்கிறான். மற்றவர்களை காதல் நினைவுகளோடு வாழ்வதற்காக படைக்கிறான் என இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் படியான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் போதோ “இதயத்தை திருடுகிறாய்” – யை இதயத்திற்கு நெருக்கமானதாக வைத்துக் கொள்ளலாம். நிச்சயம் அது ஒரு கலக்கல் காக்டெய்ல் போதையைத் தரும்.

No comments:

Post a Comment