Monday, 24 December 2018

குழந்தைகளின் சிநேகிதம் ....

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதல் முறையாக மகன் பங்கேற்றிருந்தான். அவனுடைய நண்பர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

காலையில் அரங்கில் கொண்டு போய் விட்டேன். மொத்தம் ஐந்து சுற்றுகள். மதிய உணவிற்கு முன் மூன்று சுற்று முடிந்து விடும் என விபரம் கேட்டுச் சொன்னான்.

வரும் போது மதிய சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

மதியம் சென்ற போது கொஞ்சம் முகவாட்டத்தோடு நின்றான். விசாரித்த போது, "இரண்டு ரவுண்டுல வின் பண்ணிட்டேன். மூனாவது ரவுண்டுல போச்சு டாடி. சின்ன மூவ். நகர்த்த கூடாதுன்னு நினச்சிக்கிட்டே இருந்தேன். ஆனா நகர்த்திட்டேன். அடிச்சு காய தூக்கிட்டான் " என்றான்.

வெற்றியாளர்களின் வாழ்வில் இருந்து சில நிகழ்வுகளை அவனுக்குச் சொன்னேன். தோல்விக்காக வருந்த வேண்டியதில்லை. இன்னும இரண்டு சுற்று இருக்கு. புதுசா அதை ஆரம்பி என நம்பிக்கை கொடுத்தேன். போட்டி முடியும் நேரம் வருகிறேன் என சொல்லி விட்டு வந்து விட்டேன்.

மாலையில் சென்ற போதும் முந்தைய சோகத்தோடு நின்றான்.

என்னாச்சு? என்றேன்.

"நாலாவது ரவுண்டுல அடிவாங்கிடுச்சு டாடி. என்னை எதிர்த்து ஆடுனது ஸ்டேட் பிளேயர்" என்றான்.

"தோற்றாலும் உனக்கு டிப்ஸ் கிடைச்சிருக்கும்ல" என்றேன்.

"அதுகூட எனக்கு கவலை இல்லை டாடி. ஃபைனல் ரவுண்டுல என் குளோஸ் ஃபிரண்டை தோற்கடிக்க வேண்டியதாப்போச்சு டாடி" என்றான்.

விளையாட்டு தானே என நான் சொன்னதும் அருகில் இருந்த அவன நண்பன், "இவன் ஃபீல் பண்றான். நீ ஜெயிச்சாதா வச்சுக்கடான்னு அவன்ட்ட சொல்றான். அவன் நீ தானே ஜெயிச்சே. அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டான்" என்றான்.

என்னிடமிருந்து விலகிச் சென்றவர்களை பார்த்த படி நின்றேன்.

மகனை மிதிவண்டியின் பின் சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு கடைசி சுற்றில் அவனோடு விளையாடிய அவன் நண்பன் ஓட்டிக் கொண்டிருந்தான்.

அவர்களைப் பார்த்து மெல்ல புன்னகைத்தேன்.

பதிலுக்கு அவர்கள் இருவரும் புன்னகைத்த படி கைகளைத் தூக்கிக் காட்டினார்கள்

நட்பு சார்ந்து புதிய எண்ணங்கள் என்னுள் விரவத் தொடங்கியது.

No comments:

Post a Comment