வழிபாட்டின் உன்னதங்களை உணராமல் வெறுமனே ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வதிலும், வழிபாட்டின் வழிமுறைகளை இம்மி பிசகாமல் பின்பற்றுவதிலும் ஒரு பயனும் இல்லை. இவைகளை உணர்ந்தால் மட்டுமே உயர்பேற்றை அடைய முடியும் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதாலயே அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை என்ற ஐந்து வகை உபச்சாரங்களுடன் ஆலயங்களில் இறைவனுக்கு ஆறுகால பூஜை நடத்தப்படுகிறது.
பந்த பாசங்கள், சிற்றின்பங்கள், ஆசைகள் இவைகளின் மீதான பற்றை விட்டு விட்டு இறைவனின் உலகத்திற்குள் வரும் போது நம்முடைய தவறான எண்ணங்களைப் பலி தருவதற்காக அமைந்திருப்பது பலிபீடம்! ஆலயத்திற்குள் விழுந்து வணங்கும் போது பலிபீடத்திற்கு அருகில் விழுந்து வணங்க வேண்டும். அப்படி வணங்கும் போது “என்னுடைய கீழான எண்ணங்களை எல்லாம் பலி கொடுத்து விட்டேன். இனி அவைகள் தலை தூக்க வாய்ப்பே இல்லை” என நினைக்க வேண்டும். அவ்வாறே எழும் போது, ”என் கீழான எண்ணங்களை எல்லாம் விழச் செய்து விட்டு மேலான எண்ணங்களுடன் எழுகிறேன்” என்ற எண்ணம் கொள்ள வேண்டும். விழுந்து வணங்குதலை விட மேற்சொன்னவாறு “எண்ணுதல்” முக்கியம்.
கர்ப்பகிரகத்தில் குருக்கள் வேத மந்திரங்களை உரக்கச் சொல்லி அர்ச்சணை செய்கிறார். சமஸ்கிருதத்தில் அவர் உச்சரிக்கிற அர்ச்சணை வரிகளுக்கு அர்த்தம் தேடுவதை விட அந்த வரிகள் ஒவ்வொன்றின் முடிவிலும் சொல்கின்ற “நமஹ” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டாலே போதும். அர்ச்சணைக்கான அர்த்தம் புரிந்து விடும். “நமஹ” என்ற சொல்லிற்கு “என்னுடையது இல்லை” என்று பொருள். பற்றற்று இருத்தலின் வெளிப்பாடு அர்ச்சணை!
பற்றற்று இருத்தல் பரம் பொருளை அடைவதற்கான மார்க்கங்களுள் முக்கியமானது. அதனாலயே ஆலயங்களுக்குச் செல்லும் போது அந்தந்த தெய்வத்திற்கும், ஆலய வழிபாட்டிற்கும் உகந்த, உரிய பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றனர். “கை வீசம்மா கை வீசு” என வெறுங்கையோடு ஆலய வழிபாட்டிற்கு வருவது இறை வழிபாட்டிற்கு அழகல்ல.
இருள் சூழ்ந்த கர்ப்பகிரகத்திற்குள் ஒளியாய், ஒலியாய் விக்கிரகமாக உறைந்திருக்கின்ற இறைவனை கண்டுணர்வதற்காக அங்கு சிறிய விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஒளியின் மூலம் இறைவனைக் கண்டுணர முடியும் என்பதற்கு கார்த்திகை தீப விழா, மகர ஜோதி இரண்டும் மகத்தான உதாரணங்கள்!
ஒரு நிறுவனத்திற்கும், அதைச் சார்ந்த மற்றவர்களுக்கும் தொடர்பு மையமாக அந்த நிறுவனத்தின் பி.ஆர்.ஓ. அலுவலகம் செயல்படுவதைப் போல இறைவனுக்கும், மனிதனுக்குமான பி.ஆர்.ஓ. மையமாக இருப்பது நெருப்பு. அதனாலயே ஐம்பூதங்களுள் நெருப்பு மையமாக அமைந்திருக்கிறது. விளக்கின் ஒளியில் கண்டுணர்ந்த இறைவனோடு நாம் தொடர்பை உருவாக்கிக் கொள்வதற்காக சூடம் ஏற்றி தீபாரதனை காட்டப்படுகிறது.
சூடம் என்பது ஆத்மாவைக் குறிக்கும். சூடத்தை ஏற்ற்றியவுடன் அது தீபம் போல எரிந்து ஆத்மா சிவகர்ணம் பெற்று நிற்பதைக் காட்டும். ஆனால், இறுதியில் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும். அதுபோல ஆத்மா உடலுக்குள் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தாலும் இறுதியில் அதை விட்டு விட்டு இறைவனிடமே வந்து சேரும் என்பது இதன் தத்துவம்.
நம் ஆத்மாவானது இறைவனை அடைய வேண்டுமானால் நம்முடைய அஞ்ஞான மலத்தினை ஞானம் என்ற அக்கினியில் எரித்து அழிக்க வேண்டும். என்பதற்காகவே வழிபாட்டின் முடிவில் விபூதி தரப்படுகிறது. அப்படி உணர்ந்ததை எந்த நிலையிலும், எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வேன் என்பதன் அடையாளமாக விபூதியை நெற்றி, மார்பு என தலை முதல் கால் வரை பதினாறு அங்கங்களில் பூசிக் கொள்கின்றோம்.
தோஷங்களிலே பயங்கரமானது ”பார்வை தோஷம்”. கலியுக காதலைப் போல பார்த்ததும் பற்றிக் கொள்ளக்கூடியது. சிலரின் பார்வை தீட்சன்யமாக இருக்கும். அது பிறரின் மேல் பட்ட மாத்திரத்தில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சிருதகர்மாவின் தீட்சன்யப பார்வை பட்டதாலயே விநாயகர் தன் தலையை இழக்க வேண்டி இருந்தது. இழந்த தலைக்கு மாற்றாய் அவருக்குப் பொருத்திய யானை தலையால் அவர் “கஜமுகன்” ஆனார் என்று புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே பார்வை தோஷத்திற்கு விதிவிலக்கானவர்கள் எவருமில்லை. அப்படியான பார்வை தோஷம் ஆலயத்திற்கு வந்தவர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலயே மற்றவர்களின் பார்வை படும் கண் புருவங்களுக்கு மத்தியில் நெற்றியில் வைத்துக் கொள்ள தேவியின் நிறத்தையும், அருளையும் குறிக்கக்கூடிய குங்குமம் தரப்படுகிறது.
இவையெல்லாம் நிகழ்ந்த பின் இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்தவைகளை பிரசாதமாகத் தருவார்கள். அதுவரையிலும் அப்பம், பொரி, கடலை என தனித்தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டவைகள் இறைவனுக்குப் படைத்த பின் “பிரசாதம்” என்றாகி விடும். நம்முடையதாய் இருந்தது இறைவனுக்குரியதாய் ஆகிவிடுகிறது. அதாவது மற்றவர்களுக்கு உரியதாகி “பிரசாதம்” ஆனது. தன் பெயரினை இழந்த பொருள் ”பிரசாதம்” என்ற உயர் பேற்றைப் பெற்றதைப் போல “நான்” அகந்தையை இழந்து உயர்நிலையைப் பெற வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தம்.
தன்னிடம் கொடுத்ததை எல்லோருக்குமாக பிரித்துக் கொடுப்பது இறைவனின் குணம். தன்னிடம் கொடுத்ததை கொடுத்தவனுக்குக் கூட திருப்பித் தர மறுப்பது மனிதனின் குணம். தன்னுடைய குணத்தில் இருந்து மாறி இறைவனின் குணத்திற்கு வர வேண்டும் என்பதால் பிரசாதத்தை பிறருக்குக் கொடுத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றனர்.
ஆலய வழிபாட்டின் போது வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் எண்ணங்கள் முழுவதும் இறைவனை நோக்கியே இருக்க வேண்டும். கண் காணும் தேவ ஆராதனையின் போது காது கேட்க மணி ஓசை, சங்க நாதம், வேத மந்திரங்கள் ஒலிக்கப்படுகிறது. மூக்கு நுகர வாசனை மலர்கள் தரப்படுகிறது நாக்கு ருசிக்க பிரசாதம் தரப்படுகிறது. மொத்தத்தில் மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன் வழிபாட்டில் ஈடுபட்டால் மட்டுமே அதன் உச்சத்தில் ஆத்ம சொரூபத்தை அடைய முடியும்.
“இறைவா! என்னுடைய வாழ்வும், முயற்சியும் உன்னுடைய வாலறிவிலும், வல்வினையிலும் அடங்கி இருக்கட்டும். என் முயற்சி உன் திட்டத்திற்கு ஏற்ப இருக்குமேயானால் நான் வெர்றி பெறுவேன். ஒருவேளை நான் தோல்வியடைந்தாலும் அதை உன் ஆணையாகவே ஏற்றுக் கொள்வேன் என்று வழிபாட்டின் மூலம் பெற்ற மனநிலையை இறைவனோடு உண்டாக்கிக் கொள்வதற்காகவே வழிபாட்டின் இறுதியில் ஆலயத்தை வலம் வருகின்றோம். வலம் வருதல் பிரணாயமத்தின் அடையாளம். நாம் பெற்ற மேலான எண்ணங்களால் மனம் பிரணாயமத்திற்குத் தயாராகிறது. அந்த எண்ணத்தால் உருவாகும் மாற்றங்களால் சுவாசம் சீரடைகிறது. சீரான சுவாசம் ஆத்மாவை ஆனந்தமடைய வைக்கிறது. இதன் அடையாளம் ஆலயக் “கொடியேற்றம்”.
ஆலயத்தை வலம் வரும் போது எண்ணம் மட்டுமின்றி நம்முடைய உடம்பு என்ற பூதப்பொருளும், அதனுள் இருக்கக்கூடிய இரத்தம், எலும்பு, நரம்பு, சதை, நீர், வாயு முதலியவைகளோடு சொல்லும், செயலும் இறையருளைப் பெற்று விளங்குவதாக பாவனை செய்து கொள்ள – நினைக்க வேண்டும். அப்படிச் செய்ய பேச்சு பெரும் தடையாக இருக்கும் என்பதாலயே அலயத்தை மெளனமாக வலம் வர வேண்டும் என்ற பொருளில் “நாக்கை அடக்கி நானை (மூச்சை) பிடி” என்றனர். ஆனால், நாமோ நாக்கையும் அடக்குவதில்லை. நானையும் பிடிப்பதில்லை!
ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். மூன்று என்பது தீர்க்கத்தைக் குறிக்கும். வழிபாட்டின் இத்தகைய உன்னதங்களை நாம் உணர்ந்து கொண்டதை செல்லுவதன் அடையாளமாகவே ஆலயத்தை மூன்று முறை வலம் வருகின்றோம். சுற்றி வந்த கையோடு வீட்டை நோக்கி நடையைக் கட்டி விடக் கூடாது. ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்பே வீட்டிற்குக் கிளம்ப வேண்டும்.
நம் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது நம் குழந்தையை அவர்களுடன் சென்று பஸ்ஸிலோ, இரயிலிலோ, விமானத்திலோ வழியனுப்பி விட்டு வரச் சொல்லி அனுப்பி வைப்போம். அதற்கு விருந்தினர், “வேண்டாம். நான் போய்விடுவேன், சிரமம் ஏதுமில்லை. நீ இங்கேயே இரு” என நம் குழந்தையின் கையைப் பற்றிப் பக்குவமாக மறுப்புச் சொல்லி விட்டு நம்மிடமிருந்து விடை பெறுவர். அதேபோல, வழிபாட்டிற்கு ஆலயத்திற்கு வந்த நாம் விழுந்து வணங்கி வீட்டிற்குச் செல்லத் தயாரானதும் நம்மை வழியனுப்பி வைத்து விட்டு வரச்சொல்லி இறைவன் நம்மோடு பூதகணங்களை அனுப்பி வைப்பார்.
விருந்தினரைப் போல நாம் அதற்குச் சம்மதிக்காமல் “நான் சென்று விடுவேன். இறைவனின் துணை எனக்கிருப்பதால் பயமில்லை. எனவே நீங்கள் இங்கேயே இருங்கள்” என அந்த பூதகணங்களிடம் மறுப்புச் சொல்லி விட்டு இறைவனிடம் விடைபெறுவதற்காக வீட்டிற்குக் கிளம்பும் முன் ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்து செல்ல வேண்டும்.
நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்
No comments:
Post a Comment