ஆலயத்திற்கு வந்ததும் முதலில் அதைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் வேலி போன்ற பெரிய மதில் சுவர் வரவேற்கும். நம் வீட்டைச் சுற்றிலும் வேலி உண்டு. ஆலயத்தைச் சுற்றிலும் வேலி உண்டு. ஒன்று நம் ஆசையின் அடையாளம். மற்றொன்று பற்றற்று இருத்தலின் அடையாளம். இன்னும் எளிமையாகச் சொன்னால் வீட்டு வேலி ஜீவாத்மாவின் பலவீனம். ஆலய வேலி ஜீவாத்மாவின் பலம்! ஆசைகள், பந்த பாசங்கள் இவைகளிலிருந்து விலகி இறைவனை நாடி வந்தால் மட்டுமே இறையருளைப் பெற முடியும் என்பதன் அடையாளமாக ஆலயத்தை தனித்துக் காட்டும் படியாக அதைச் சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் கட்டப்பட்டிருக்கிறது.
வெளிப்புற மதில் சுவர் தாண்டினால் வெளிக் கோபுரம் இருக்கும். இறைவனின் திருவடி அடையாளமாகத் திகழும் வெளிக் கோபுரத்தில் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள், பேருயிர்கள் எல்லாம் சிற்ப வடிவில் இடம் பெற்றிருக்கும். இது பிரபஞ்சம் முழுமையும் இறைவனிடம் அடக்கம் என்பதன் அடையாளம். பிரபஞசத்தையே தன் காலடியில் வைத்திருக்கின்ற இறைவனின் வீடான அலயத்திற்குள் வரும் போது செருப்போடு சிற்றின்ப ஆசைகளையும் வெளியிலேயே விட்டு விட்டு வர வேண்டும் என்பதற்காகத் தான் வெளிக்கோபுரத்தில் விரச வடிவிலும் பொம்மைகள் இடம் பெற்றிருக்கின்றன.
வெளிக்கோபுரத்தில் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு, பதினொன்று என ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஒன்றன் மேல் ஒன்றாக பெருக்கிக் கொண்டே போகும். அவைகள் ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் உண்டு. மூன்று வாசல்கள் ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளையும், ஐந்து வாசல் ஐம்பொறிகளையும், ஏழு வாசல்கள் ஐம்பொறிகளுடன் மனம், புத்தி ஆகியவைகளையும், ஒன்பது வாசல்கள் ஏழுடன் சித்தம், அகங்காரம் ஆகியவைகளையும் குறிக்கும். இத்தனை வாசல்கள் இருந்தும் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தரை மட்டத்தில் உள்ள ஒரு வாசல் மட்டுமே உதவுகிறது. மற்ற வாசல்கள் இருந்தும் பயன்படாததைப் போல அக, புற கரணங்கள் (வழிகள்) பல நம்மிடம் இருந்தாலும் இறைவனை நாடிச் செல்ல “மனம்” என்ற கரணம் மட்டுமே பயன்படும். எனவே, மற்ற கரணங்களை இருக்கும் தன்மையிலேயே விட்டு விட்டு மனதின் உதவியோடு மட்டுமே இறைவனை நோக்கி உள்முகமாகச் செல்ல வேண்டும் என்பதே வெளிக்கோபுரத்தின் தத்துவம்.
இறைவனை நோக்கி வருவதற்கு மட்டுமல்லாது எப்பொழுதும் இறைவனை நோக்கியே மனம் இருந்தால் மட்டுமே இறையருளைப் பெற முடியும் என்பதை உணர்த்துவதற்காகவே ஜீவாத்மாவின் அடையாளமாகிய தெய்வ வாகனங்கள் இறைவனை நோக்கிய படியே அமர்ந்திருக்கும்.
இவைகளைக் கடந்தால் வெளிப்பிரகாரம், உள் பிரகாரம் அதனுள் உள்ள பிரகாரம் என மூன்று பிரகாரங்கள் இருக்கும். ஆசைகள், பந்த பாசங்கள், சிற்றின்பங்களை வெளியே விட்டு விட்டு வந்ததைப் போல உலகப்பற்றையும் படிப்படியாக விடப் பழக வேண்டும் என்பதன் அடையாளம் இந்தப் பிரகாரங்கள். இதேபோல கர்ப்பகிரகத்தைச் சுற்றி இருக்கின்ற ஐந்து பிரகாரங்கள் நம்முடைய ஐம்புலன்களையும் அடக்கி பக்தி செலுத்த வேண்டும் என்பதன் அடையாளமாகும். உலகப்பற்றை படிப்படியாக விட்டு விடவும், ஐம்புலன்களை அடக்கி பக்தி செலுத்தவும் பழகி விட்டால் இறைவனின் சந்நிதானமான கர்ப்பகிரகத்தை எளிதில் அடையலாம் என்பதாலயே கர்ப்பகிரகத்தின் முன்னும், அதைச் சுற்றிலும் பிரகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆலயம் முழுக்க ஆயிரம் விளக்குகளை அமைத்தாலும் கர்ப்பகிரகத்திற்குள் மட்டும் எந்தவித மின் விளக்குகளும் அமைக்கப்படுவதில்லை. காற்றோ, சூரிய ஒளிகளோ புக முடியாத படி ஜன்னல்களோ, இடை வெளிகளோ, கிராதிகளோ வைக்காமல் உள்ளே செல்லவும், வெளியே வரவும் ஒரே ஒரு வாசல் மட்டுமே வைத்து கர்ப்பகிரகத்தை அமைத்திருப்பார்கள். இது இறைவனை நாம் நாடிச் செல்வதற்கான ஒரே கரணம் மனம் மட்டுமே என்பதன் அடையாளம். அந்த மனதை ஆத்மா குடியிருக்கும் உள்ளத்தை நோக்கித் திருப்பினால் உள்ளத்திற்குள் கார் இருள் தான் தெரியும். அதனாலயே உள்ளத்தைக் குறிக்கக்கூடிய கர்ப்பகிரகம் வெளிச்சமில்லாமல் இருட்டாக அமைக்கப்பட்டிருக்கும். வெளிச்சமாக இருக்கும் போது மனதை இறைவனை நோக்கி உள்முகமாக வைத்திருப்பது கடினம். கவனமும் அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போல சிதறி ஓடும். அதுவே இருளாக இருக்கும் போது சாத்தியம். அப்படித் தொடர்ந்து உள்நோக்கியே வைத்திருக்கப் பழகி விட்டால் ஆலய வழிபாட்டின் போது தீபாராதனை மூலம் இறைவன் காட்சி தருவதற்கு முன் எப்படி மணி ஓசை கேட்கிறதோ அப்படியான ஒரு வித மணி ஓசையை நமக்குள்ளேயே கேட்க முடியும். அப்படிக் கேட்கக்கூடிய ஓசையை “ஞானம்” என்றும், அதைக் கேட்டவர்களை “ஞானிகள்” என்றும் அழைத்தனர். இரண்டிற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர்கள் இராமகிருஷ்ண பரமஹம்சர், இரமணர், புத்தர்.
ஞானம் உணரும் ஞானிகளாய் எல்லோராலும் இருக்க முடியாது என்பதாலயே இறைவன் தன்னை அடையும் இன்னொரு மார்க்கத்தை கர்ப்பகிரகத்தின் வாசலில் அமைக்கப்படிருக்கும் மூன்று படிகள் மூலம் உணர்த்துகிறான். கர்ப்பகிரகத்தின் வாசலில் மூன்றே மூன்று படிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்., இது ஆசை, ஆணவம், அகங்காரம் என்ற மூன்று அக்ஞானத்தைக் குறிக்கும். இம்மூன்றையும் நீக்கி விட்டுத் தன்னை நோக்கி வருபவன் தன்னையடையும் தகுதி பெற்றவனாகி விடுவான் என்பதை பக்தர்களுக்கு எளிமையாக உணர்த்துவதன் அடையாளம் மூன்று படிகள். படிகளின் தத்துவம் உணர்ந்தால் பரமாத்மாவையும் நெருங்கலாம்.
நன்றி : ஓம் சரவணபவ மாத இதழ்
No comments:
Post a Comment